கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
kaTanenpa nallavai yellAm kaTanaRintusAnRANmai mERkoL pavarkku
Sriranjani Balaji
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்குரிய கடமைகளைத் தெளிவாக உணர்ந்து, சான்றாண்மை என்னும் உயர்ந்த ஒழுக்க நெறியை மேற்கொண்டு வாழ்கின்ற பெருமக்களுக்கு, உலகில் உள்ள எல்லா நற்குணங்களும் நற்செயல்களும் இயல்பான கடமைகளாகவே விளங்கும் என்று சான்றோர்கள் கூறுவர்.
• கடன் அறிந்து = தாம் செய்ய வேண்டிய கடமைகள் இவை என்று உணர்ந்து,• சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு = சான்றாண்மை என்னும் உயர்ந்த நற்பண்பை மேற்கொண்டு வாழ்பவர்களுக்கு,• நல்லவை எல்லாம் = உலகில் உள்ள எல்லா நற்குணங்களும் நற்செயல்களும்,• கடன் என்ப = அவர்களின் இயல்பான கடமையே என்று அறிஞர்கள் கூறுவர்.
மு.வரதராசன்
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.
பரிமேலழகர்
கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.
Meaning in English
All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way





