Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 974

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

orumai makaLirE pOlap perumaiyumtannaittAn koNTozhukin uNTu

Isai Priyan

பொருள் / உரை

முருகா எளிய உரை

மன உறுதி கொண்ட கற்புடைய பெண்கள் தம் ஒழுக்க நெறியிலிருந்து தவறாமல் தம்மைக் காத்து வாழ்வது போல, ஒருவன் தன் பெருமைக்குரிய நற்பண்புகளிலிருந்து தவறாமல் தன்னைத் தானே காத்து வாழ்ந்தால் பெருமை அவனிடம் நிலைத்து நிற்கும்.

• ஒருமை மகளிரே போல = மனம் மாறாத கற்புடைய நற்குலப் பெண்கள் தம்மைத் தாமே காத்து ஒழுக்கத்தோடு வாழ்வது போல,• பெருமையும் = ஒருவனுக்குரிய சிறந்த பெருமைப் பண்பும்,• தன்னைத் தான் கொண்டு ஒழுகின் = ஒருவன் தன் ஒழுக்கமும் மானமும் குறையாமல் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்ந்தால்,• உண்டு = அவனிடம் நிலைத்து நிற்கும்.

மு.வரதராசன்

ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

பரிமேலழகர்

ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம் காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு - பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல் தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவன்கண் உண்டாம். (பொருளின் தொழில், உவமையினும் வந்தது. கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால், அஃது உளதாமாறு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

Meaning in English

Like single-hearted women, greatness too, Exists while to itself is true

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout