Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 973

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்.

mEliruntut mElallAr mElallar kIzhiruntumkIzhallAr kIzhal lavar

S. Yadhunaath

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயர்ந்த நற்பண்புகள் இல்லாதவர்கள் செல்வத்தாலும் பதவியாலும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பெரியோராகக் கருதப்பட மாட்டார்கள்; உயர்ந்த நற்குணங்கள் கொண்ட சான்றோர்கள் எளிய வறுமை நிலையில் இருந்தாலும் கீழ் மக்களாக மாட்டார்கள்.

• மேலல்லார் = பெருமைக்குரிய நற்பண்புகள் இல்லாதவர்கள்,• மேலிருந்தும் = பதவியாலும் செல்வத்தாலும் உயர்ந்த இடத்தில் இருந்தாலும்,• மேலல்லர் = உயர்ந்த பெரியோர் ஆக மாட்டார்கள்;• கீழல்லார் = பெருமை தரும் நற்குணம் உடையவர்கள்,• கீழிருந்தும் = வறுமையாலும் எளிய நிலையாலும் தாழ்ந்த இடத்தில் இருந்தாலும்,• கீழல்லவர் = கீழ்நிலை மக்கள் ஆக மாட்டார்கள்.

மு.வரதராசன்

மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

பரிமேலழகர்

மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

Meaning in English

The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estate

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout