மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து.
maruntOmaR RUnOmpum vAzhkkai peruntakaimaipITazhiya vanta iTattu
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனுடைய பெருந்தகைமையும் சுயமரியாதையும் அழியக்கூடிய இழிவு நேரும்போது, மானத்தைக் காக்காமல் தன் வெறும் உடம்பைப் பேணி உயிர்வாழும் வாழ்க்கை, சாகாமல் நிலைத்திருப்பதற்குரிய மருந்தாகுமோ? சாகாத மருந்து என்று எதுவும் இல்லாதபோது மானமே உயிரினும் மேலானது.
• பெருந்தகைமை = நற்குடிப் பெருமைக்குரிய,• பீடு அழிய வந்த இடத்து = மானமும் பெருந்தன்மையும் அழியக்கூடிய இழிநிலை வரும்போது,• ஊன் ஓம்பும் வாழ்க்கை = மானத்தை விட்டுவிட்டு வெறும் உடம்பைக் காத்து வாழ்கின்ற வாழ்க்கை,• மற்று மருந்தோ = பின்னும் ஒருபோதும் சாகாமல் இருப்பதற்கான மருந்தாகுமோ? (ஆகவே மானமே மேலானது).
மு.வரதராசன்
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
பரிமேலழகர்
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)
சாலமன் பாப்பையா
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?
Meaning in English
When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet





