Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 967

பொருட்பால்ஒழிபியல்97. மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.

oTTArpin senRoruvan vAzhtalin annilaiyEkeTTAn enappaTutal nanRu

Mathanraj

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன்னை மதிக்காதவர்களின் பின்னே கையேந்தி நின்று பொருள் பெற்று இழிவாக உயிர் வாழ்வதைக் காட்டிலும், சுயமரியாதையை இழக்காமல் அந்நிலையிலேயே மடிந்து போனான் என்று உலகத்தாரால் போற்றப்படுவது ஒருவனுக்குப் பெருமை தரும்.

• ஒட்டார் பின் சென்று = தன்னை மதியாத பகைவரின் பின்னே சென்று,• ஒருவன் வாழ்தலின் = கையேந்தி உயிர் வாழ்வதைக் காட்டிலும்,• அந்நிலையே = அத்தகைய இழிவான நிலையை ஏற்காமல் அந்த இடத்திலேயே,• கெட்டான் எனப்படுதல் நன்று = மானத்தோடு மடிந்து போனான் என்று உலகத்தாரால் சொல்லப்படுவது அவனுக்கு மிகவும் நல்லதாகும்.

மு.வரதராசன்

மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

பரிமேலழகர்

ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)

சாலமன் பாப்பையா

இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

Meaning in English

Better 'twere said, 'He's perished!' than to gain The means to live, following in foeman's train

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout