குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.
kunRin anaiyArum kunRuvar kunRuvakunRi anaiya seyin
T. V. Gopalakrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
குடிப்பெருமையாலும் நற்புகழாலும் மலை போல உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்கூட, தம் சுயமரியாதைக்கும் தகுதிக்கும் இழுக்கு தரும் இழிசெயல்களை ஒரு குன்றிமணி அளவு மிகச் சிறிதாகச் செய்தாலும் தம் பெருமை இழந்து தாழ்ந்து போவார்கள்.
• குன்றின் அனையாரும் = குடிப்பிறப்பாலும் புகழாலும் மலை போல உயர்ந்த பெருமை உடையவர்களும்,• குன்றுவ = தம் பெருமைக்குக் குறைவு தரக்கூடிய இழிவான செயல்களை,• குன்றி அனைய செயின் = ஒரு சிறிய குன்றிமணி அளவு செய்தாலும்,• குன்றுவர் = தம் மதிப்பும் பெருமையும் இழந்து தாழ்ந்து போய்விடுவர்.
மு.வரதராசன்
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
பரிமேலழகர்
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)
சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
Meaning in English
If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought





