தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.
talaiyin izhinta mayiranaiyar mAntarnilaiyin izhintak kaTai
Kurale Kavithaiyai
பொருள் / உரை
முருகா எளிய உரை
தலையில் இருக்கும்வரை மதிக்கப்பட்டுப் பேணப்பட்ட மயிர், கீழே உதிர்ந்துவிட்டால் எவ்வாறு காலடியில் மிதிபட்டு இகழப்படுகிறதோ, அதுபோலவே மானமும் ஒழுக்கமும் உள்ள உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்துபோகும் மனிதர்களும் சமுதாயத்தில் மதிப்பற்றவர்களாகக் கருதப்படுவர்.
• மாந்தர் = நற்குடிப் பிறந்த மனிதர்கள்,• நிலையின் இழிந்தக்கடை = தம்முடைய உயர்ந்த ஒழுக்க மான நிலையிலிருந்து தாழ்ந்து போகும் போது,• தலையின் இழிந்த = தலையிலிருந்து கீழே உதிர்ந்து விழுந்துவிட்ட,• மயிர் அனையர் = மயிரைப் போன்ற மதிப்பற்றவர்களாகக் கருதப்படுவர்.
மு.வரதராசன்
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
பரிமேலழகர்
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும,் விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)
சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.
Meaning in English
Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth





