இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல்.
inRi amaiyAs siRappina AyinumkunRa varupa viTal
Akshara Shritharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
இச்செயலைச் செய்யாவிட்டால் வாழ்க்கையே நடைபெறாது என்னும் அளவுக்கு இன்றியமையாத முக்கியமான செயலாக இருந்தாலும், ஒருவன் தன் குடிப்பெருமைக்கும் சுயமரியாதைக்கும் இழிவு தரும் செயல்களை ஒருபோதும் செய்யாமல் தவிர்த்துவிட வேண்டும்.
• இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் = செய்யாவிட்டால் வாழ்க்கை நடைபெறாது என்னும் இன்றியமையாத சிறப்புடைய செயல்களே ஆயினும்,• குன்ற வருப = தம்முடைய குடிப்பெருமைக்கும் சுயமரியாதைக்கும் குறைவு தரக்கூடிய செயல்களை,• விடல் = ஒருபோதும் செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
மு.வரதராசன்
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
பரிமேலழகர்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
Meaning in English
Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain





