அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்
allavai tEya aRamperukum nallavainATi iniya solin
James Vasanthan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நன்மை தரும் நல்லவற்றை ஆராய்ந்திட்டே!இனிய சொல்லால் அதனை உரைத்திட்டே!தீவினை பாவங்கள் தேய்ந்து அழியுமே!தர்மமும் நன்மையும் அங்கே பெருகுமே!
• நல்லவை நாடி = பிறருக்கு நன்மை தரும் நல்லவற்றை ஆராய்ந்து,• இனிய சொலின் = கனிவான இனிய சொற்களால் எடுத்துச் சொன்னால்,• அல்லவை தேய = தீவினைகளும் பாவங்களும் தேய்ந்து அழியும்;• அறம் பெருகும் = தர்மமும் நன்மைகளும் மென்மேலும் பெருகி வளரும்.
மு.வரதராசன்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
பரிமேலழகர்
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
Meaning in English
Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow





