நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
nilattiR kiTantamai kAlkATTum kATTumkulattiR piRantArvAys sol
Vilvapathi
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு நிலத்தின் தரத்தையும் செழிப்பையும் அதில் முளைத்த பயிரின் தன்மையே வெளிப்படுத்துவது போல, ஒருவர் பேசும் வாய்ச் சொல்லே அவர் எத்தகைய நற்குடியில் பிறந்தவர் என்பதை வெளிப்படுத்தும்.
• நிலத்தில் கிடந்தமை = ஒரு நிலத்தின் வளத்தையும் தன்மையையும்,• கால் காட்டும் = அதில் முளைத்து வளரும் பயிரின் தண்டு காட்டும்;• குலத்தில் பிறந்தார் = அதுபோல நற்குடியில் பிறந்தவர்களின் குடும்பப் பண்பாட்டை,• வாய்ச்சொல் காட்டும் = அவர்கள் பேசும் கனிவான வாய்ச் சொல் உலகுக்குக் காட்டும்.
மு.வரதராசன்
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
பரிமேலழகர்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)
சாலமன் பாப்பையா
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
Meaning in English
Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth





