நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும்.
nalattinkaN nArinmai tOnRin avanaikkulattinkaN aiyap paTum
Varsha Nataraj Sriguru
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனிடம் மற்ற நல்ல பண்புகள் இருந்தாலும், பிறரிடத்தில் காட்டும் அன்பும் ஈரநெஞ்சமும் இல்லாத நிலை காணப்பட்டால், அவன் உண்மையான நற்குடியில் பிறந்தவன் தானா என்று உலகம் சந்தேகப்படும்.
• நலத்தின்கண் = நற்குடிப் பண்புகளைக் கொண்ட ஒருவனிடம்,• நார் இன்மை தோன்றின் = பிறர்மீது அன்பும் இரக்கமும் இல்லாத தன்மை வெளிப்பட்டால்,• அவனை = அவனைப் பற்றி உலகம்,• குலத்தின்கண் ஐயப்படும் = அவன் உண்மையான நற்குடியில் பிறந்தவன் தானா என்று ஐயப்படும்.
மு.வரதராசன்
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.
பரிமேலழகர்
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
Meaning in English
If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim





