Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 957

பொருட்பால்ஒழிபியல்96. குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

kuTippiRantAr kaNviLangkum kuRRam visumpinmatikkaN maRuppOl uyarntu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்பெயர் கொண்ட சிறந்த குடியில் பிறந்தவர்களிடம் ஏற்படும் மிகச் சிறிய தவறுகளும் குறைகளும், பரந்த வானில் உள்ள ஒளிவீசும் முழு நிலவில் உள்ள களங்கம் போல அனைவருக்கும் மிக எடுப்பாகத் தெரியும்.

• குடிப்பிறந்தார்கண் = நற்குடியில் பிறந்தவர்களிடம்,• குற்றம் = தோன்றும் சிறிய குற்றமும் குறையும்,• விசும்பின் = வானத்தில் உள்ள,• மதிக்கண் = முழு நிலவில் தோன்றும்,• மறுப்போல் = களங்கத்தைப் போல,• உயர்ந்து விளங்கும் = உலகத்தார் அனைவருக்கும் மிக வெளிப்படையாகத் தெரியும்.

மு.வரதராசன்

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

பரிமேலழகர்

குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

Meaning in English

The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout