வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று.
vazhangkuva tuLvIzhntak kaNNum pazhangkuTipaNpin talaippirital inRu
Shanjev Ram Subaram
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறருக்குக் கொடுத்து உதவும் செல்வ வளம் வறுமையினால் குறைந்துபோன காலத்திலும், தொன்றுதொட்டு வரும் நற்குடியில் பிறந்தவர்கள் தம்முடைய தாராள மனமும் பெருந்தன்மையும் கொண்ட நற்பண்புகளிலிருந்து விலக மாட்டார்கள்.
• வழங்குவது = பிறருக்குக் கொடுத்து உதவும் வண்மை,• உள்வீழ்ந்தக் கண்ணும் = வறுமையின் காரணமாகத் தம்மிடம் சுருங்கிப் போன காலத்திலும்,• பழங்குடி = வழிவழியாகப் பெருமையோடு வாழ்ந்து வரும் நற்குடிப் பிறந்தார்,• பண்பின் = தமக்குரிய ஈகை மற்றும் நற்பண்புகளிலிருந்து,• தலைப்பிரிதல் இன்று = ஒருபோதும் விலகி மாறுபடுவதில்லை.
மு.வரதராசன்
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
பரிமேலழகர்
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)
சாலமன் பாப்பையா
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.
Meaning in English
Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace





