நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகையென்ப வாய்மைக் குடிக்கு.
nakaiyIkai ansol ikazhAmai nAnkumvakaiyenpa vAymaik kuTikku
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
முகம் மலர்ந்து வரவேற்றல், உள்ளதைக் கொடுக்கும் ஈகை, இனிமையாகப் பேசும் இன்சொல், யாரையும் தாழ்வாக எண்ணி இகழாத பெருந்தன்மை ஆகிய நான்கு நற்பண்புகளும் உண்மையான நற்குடிப் பிறந்தவர்களின் இயல்பான அடையாளங்கள் என்பர்.
• நகை = கண்டாரை மகிழ்விக்கும் முகமலர்ச்சியும்,• ஈகை = இல்லாதார்க்கு வழங்கும் கொடைக் குணமும்,• இன்சொல் = கனிவான இனிய சொற்களும்,• இகழாமை = எவரையும் குறைவாக எண்ணி இகழாத பண்பும்,• நான்கும் = ஆகிய இந் நான்கு நற்குணங்களும்,• வாய்மைக் குடிக்கு = திரிபில்லாத உண்மையான உயர்குடிப் பிறந்தார்க்குரிய,• வகை என்ப = இயல்பான சிறப்புக் கூறுகள் என்று கூறுவர்.
மு.வரதராசன்
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.
பரிமேலழகர்
வாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.
Meaning in English
The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobility





