Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 939

பொருட்பால்அங்கவியல்94. சூது

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.

uTaiselvam UNoLi kalviyen RaintumaTaiyAvAm Ayang koLin

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் சூதாட்டத்தை மேற்கொண்டால், அவனுக்கு நல்ல ஆடை, செல்வம், போதுமான உணவு, சமுதாயப் புகழ், கற்ற கல்வி ஆகிய ஐந்து மேன்மைகளும் வந்து சேராமல் அவனை விட்டு விலகிப் போய்விடும்.

• ஆயங்கொளின் = சூதாட்டத்தை விரும்பி மேற்கொண்டால்,• உடை = நல்ல உடையும்,• செல்வம் = செல்வமும்,• ஊண் = உணவும்,• ஒளி = நற்புகழும்,• கல்வி என்றைந்தும் = கல்வியும் ஆகிய ஐந்து மேன்மைகளும்,• அடையாவாம் = அவனைச் சேராமல் விலகிவிடும்.

மு.வரதராசன்

சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

பரிமேலழகர்

ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

Meaning in English

Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout