பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.
poruLkeTuttup poymER koLIi aruLkeTuttallal uzhappikkum sUtu
S. Eniyavan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சூதாட்டமானது ஒருவனின் செல்வத்தை அழித்து, அவனைத் தொடர்ந்து பொய் பேச வைத்து, அவனது மனதிலுள்ள இரக்கக் குணத்தைக் கெடுத்து, அவனைத் தீராத துன்பங்களில் உழலச் செய்யும்.
• பொருள்கெடுத்து = செல்வத்தை அழித்து,• பொய்மேற்கொளீஇ = பொய்களைப் பேச வைத்து,• அருள்கெடுத்து = இதயத்தின் இரக்கத்தை அழித்து,• அல்லல் உழப்பிக்கும் சூது = பெரும் துன்பத்தில் தள்ளும் சூதாட்டம்.
மு.வரதராசன்
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
பரிமேலழகர்
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)
சாலமன் பாப்பையா
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
Meaning in English
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a prey





