உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
uruLAyam OvAtu kURiR poruLAyampOoyp puRamE paTum
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
உருளும் சூதாட்டக் கவறுகளால் வரும் லாபத்தையே இடைவிடாமல் நினைத்துச் சூதாடிக்கொண்டே இருந்தால், அவனிடம் உள்ள செல்வமும் அந்த வருவாய் வழிகளும் அவனை விட்டு விலகிப் பிறர் வசம் போய்விடும்.
• உருளாயம் ஓவாது கூறின் = சூதாட்டத்தின் பண லாபத்தையே நினைத்துச் சூதாடினால்,• பொருளாயம் = சேர்த்த செல்வமும் வருவாய் வழிகளும்,• போஒய் = அவனை விட்டு நீங்கி,• புறமே படும் = அடுத்தவர் கைக்குச் சென்றுவிடும்.
மு.வரதராசன்
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
பரிமேலழகர்
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
Meaning in English
If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away





