கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
kaLLuNNAp pOzhtiR kaLittAnaik kANungkAluLLAnkol uNTatan sOrvu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
குடிப்பழக்கம் உள்ள ஒருவன் தான் குடிக்காமல் தெளிந்திருக்கும்போது, குடித்து மயங்கித் தெருவில் உருளும் மற்றொருவனைக் கண்டு, தானும் குடிக்கும்போது தனக்கும் இத்தகைய கேவலமான நிலைதானே ஏற்படும் என்று நினைத்துப் பார்த்துத் திருந்த மாட்டானா?
• கள்ளுண்ணாப் போழ்தில் = தான் குடிக்காமல் தெளிந்திருக்கும் போது,• களித்தானைக் காணுங்கால் = குடித்து மயங்கிக் கிடப்பவனைப் பார்க்கும்போது,• உண்டதன் சோர்வு = தான் குடிக்கும்போதும் ஏற்படும் இழிவை,• உள்ளான்கொல் = நினைத்துப் பார்க்க மாட்டானா?
மு.வரதராசன்
ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.
பரிமேலழகர்
கள் உண்ணாப் போழ்தில் களித்தானை - கள் உண்பானொருவன் தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணுமன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான் கொல் - காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை அவன் சோர்வால் அதுவும் இற்றென்று கருதான் போலும். (சோர்வு - மனமொழி மெய்கள் தன் வயத்த அல்லவாதல். கருதல் அளவையான் அதன் இழுக்கினை உய்த்துணரின் ஒழியும் என இதனால் அஃது ஒழிதற் காரணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?
Meaning in English
When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'





