உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
uLLoRRi uLLUr nakappaTuvar enjnjAnRumkaLLoRRik kaNsAy pavar
Abi Ganesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறருக்குத் தெரியாமல் மறைந்திருந்து குடித்துவிட்டு ஒன்றுமறியாதவர் போல் திரியும் மனிதர்களை, அவர்களது கண் சொக்கும் மயக்கத்தைக் கண்டே ஊரார் உண்மையை அறிந்து எப்போதும் எள்ளி நகையாடுவார்கள்.
• கள்ளொற்றிக் கண்சாய்பவர் = மறைந்திருந்து கள்ளருந்தி அறிவு மயங்குபவர்,• உள்ளூர் = உள்ளூரில் வாழும் மக்களால்,• உள்ளொற்றி = உள்ரகசியம் அறியப்பட்டு,• எஞ்ஞான்றும் நகப்படுவர் = எப்போதும் எள்ளி நகையாடப்படுவர்.
மு.வரதராசன்
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.
பரிமேலழகர்
கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)
சாலமன் பாப்பையா
போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.
Meaning in English
Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy





