அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.
akanamarn tItalin nanRE mukanamarntuinsolan Akap peRin
Srutanjay Narayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
முகம் மலர்ந்தே இன்சொல் பேசும் தன்மையே!அதுவே ஒரு சிறந்த நல்ல பண்பே!மனம் மகிழ்ந்து பொருள் ஈயும் தானமே!அதைவிட மேலான ஒரு நன்மையே!
• முகன் அமர்ந்து = முகம் மலர்ந்து• இன்சொலன் ஆகப் பெறின் = இனிய சொற்களைப் பேசுபவனாக ஒருவன் இருந்தால்,• அகன் அமர்ந்து = உள்ளம் மகிழ்ந்து• ஈதலின் = பொருளைக் கொடுக்கும் தானத்தைக் காட்டிலும்• நன்றே = அதுவே மிகச் சிறந்த நன்மையாகும்.
மு.வரதராசன்
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பரிமேலழகர்
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)
சாலமன் பாப்பையா
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
Meaning in English
A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred





