Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 919

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு.

varaivilA mANizhaiyAr mentOL puraiyilAppUriyarkaL Azhum aLaRu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவருக்கும் எல்லை வரம்பின்றி உடலை விற்கும் விலைமகளிரின் மென்மையான தோளானது, நற்பண்பும் ஒழுக்க உயர்வும் இல்லாத கீழ்மக்கள் விழுந்து அழியும் சேற்று நரகமாகும்.

• வரைவிலா மாணிழையார் = வரம்பில்லாமல் உடலை விற்கும் விலைமகளிரின்,• மென்தோள் = மென்மையான தோளானது,• புரையிலாப் பூரியர்கள் = உயர்வற்ற கீழ்மக்கள்,• ஆழும் அளறு = விழுந்து மூழ்கும் சேற்று நரகமாகும்.

மு.வரதராசன்

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

பரிமேலழகர்

வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.

Meaning in English

The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abject

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout