Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 916

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்.

tannalam pArippAr tOyAr takaiserukkippunnalam pArippAr tOL

Aattiff Ahamed

பொருள் / உரை

முருகா எளிய உரை

அழகு மற்றும் ஆடல் திறனால் செருக்குற்றுத் தம் அற்ப இன்பத்தைப் பலருக்கும் விற்கும் விலைமகளிரின் தோள்களை, நல்லொழுக்கத்தாலும் அறிவாலும் தம் நற்புகழை உலகில் பரப்ப விரும்பும் சான்றோர்கள் ஒருபோதும் தீண்ட மாட்டார்கள்.

• தந்நலம் பாரிப்பார் = ஒழுக்கத்தால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர்,• தகைசெருக்கி = அழகு ஆடல் ஆகியவற்றால் கர்வமடைந்து,• புன்னலம் பாரிப்பார் தோள் = அற்ப இன்பத்தைப் பலருக்கும் விற்கும் விலைமகளிரின் தோளை,• தோயார் = தீண்ட மாட்டார்கள்.

மு.வரதராசன்

அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

பரிமேலழகர்

தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார். (ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தம்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.

Meaning in English

From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout