அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ஏவல் செய்வார்கண் இல்.
aRavinaiyum AnRa poruLum piRavinaiyumpeNNEval seyvArkaN il
E. Suriya
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறநெறி தவறி மனைவியின் ஏவலாளனைப் போல அவள் ஆசைக்கெல்லாம் அடிபணிந்து வாழ்பவர்களிடம், புண்ணிய அறச்செயல்களோ, நிலையான சிறந்த செல்வமோ, இதர இன்ப நன்மைகளோ ஒருபோதும் நிலைத்திருக்காது.
• அறவினையும் = அறச் செயல்களும்,• ஆன்ற பொருளும் = சிறந்த செல்வமும்,• பிறவினையும் = பிற இன்ப நன்மைகளும்,• பெண்ஏவல் செய்வார்கண் இல் = மனைவியின் ஏவலுக்கு அடிபணிபவரிடம் இருக்காது.
மு.வரதராசன்
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
பரிமேலழகர்
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
Meaning in English
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests





