நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங்கு ஒழுகு பவர்.
naTTAr kuRaimuTiyAr nanRARRAr nannutalALpeTTAng kozhuku pavar
Rahul Hariharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனைவியின் விருப்பத்திற்கும் ஆசைக்கும் மட்டுமே அடிபணிந்து நடப்பவர்கள், தங்களை நம்பிய நண்பர்களின் துன்பத்தைப் போக்கி உதவவும் மாட்டார்கள்; அறநெறி சார்ந்த நற்செயல்களையும் ஆற்ற மாட்டார்கள்.
• நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் = மனைவி விரும்பியபடியே அடிபணிந்து நடப்பவர்,• நட்டார் குறைமுடியார் = நண்பர்களின் துன்பத்தைப் போக்கமாட்டார்,• நன்றாற்றார் = அறச்செயல்களையும் செய்யமாட்டார்.
மு.வரதராசன்
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
பரிமேலழகர்
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
Meaning in English
Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform





