Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 907

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

peNNEval seytozhukum ANmaiyin nANuTaippeNNE perumai uTaittu

Sriram Subramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

சுயபுத்தியும் அறமும் இல்லாமல் மனைவியின் ஏவலாளனைப் போல அடங்கித் திரியும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், இயல்பாகவே மானமும் நாணமும் நற்பண்பும் கொண்ட ஒரு பெண்ணின் குணமே மிக உயர்ந்த பெருமையுடையதாகும்.

• பெண்ணேவல் செய்தொழுகும் = மனைவியின் ஏவலுக்கு அடிபணிந்து நடக்கும்,• ஆண்மையின் = ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும்,• நாணுடைப் பெண்ணே = மானமும் நாணமும் உடைய பெண்ணின் குணமே,• பெருமை உடைத்து = சிறந்த பெருமை உடையதாகும்.

மு.வரதராசன்

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

பரிமேலழகர்

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)

சாலமன் பாப்பையா

மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.

Meaning in English

The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout