Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 902

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.

pENAtu peNvizhaivAn Akkam periyatOrnANAka nANut tarum

Kumaran Muthuraman

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் கடமையையும் ஆண்மையையும் போற்றாமல் மனைவியின் ஆசைக்கு அடிபணிந்து நடப்பவன் அடையும் செல்வமும் அதிகாரமும், உலகத்தார் பார்த்து வெட்கப்படும் பெரும் அவமானமாகி அவனுக்கே தலைகுனிவைத் தரும்.

• பேணாது = கடமையைப் பேணாமல்,• பெண்விழைவான் ஆக்கம் = மனைவியின் இச்சைக்கு அடிபணிபவனின் செல்வம்,• பெரியதோர் நாணாக = உலகத்தார் வெட்கப்படும் பெரும் அவமானமாகி,• நாணுத் தரும் = அவனுக்கும் தலைகுனிவையே தரும்.

மு.வரதராசன்

கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

பரிமேலழகர்

பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

Meaning in English

Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout