மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்வேண்டாப் பொருளும் அது.
manaivizhaivAr mANpayan eytAr vinaivizhaivArvENTAp poruLum atu
Abdul Razak Kamal
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொதுக் கடமையையும் அறத்தையும் மறந்து மனைவியின் விருப்பங்களுக்கு மட்டுமே அடிபணிந்து நடப்பவர்கள் சிறந்த புகழையும் அறப்பயனையும் அடைய மாட்டார்கள்; பெரிய செயல்களைச் சாதிக்க விரும்பும் சான்றோர்கள் அத்தகைய மயக்கத்தை விரும்பாமல் ஒதுக்குவார்கள்.
• மனைவிழைவார் = கடமையை விட்டு மனைவிக்கு அடிபணிந்து நடப்பவர்,• மாண்பயன் எய்தார் = சிறந்த அறப்பயனையும் புகழையும் அடையமாட்டார்;• வினைவிழையார் = கடமையாற்ற விரும்பும் வீரர்,• வேண்டாப் பொருளும் அது = விரும்பாத சிற்றின்பம் அதுவே.
மு.வரதராசன்
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.
பரிமேலழகர்
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.)
சாலமன் பாப்பையா
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
Meaning in English
Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain





