எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
eriyAR suTappaTinum uyvuNTAm uyyArperiyArp pizhaittozhuku vAr
Lakshmi Rajesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
கொடிய நெருப்பில் சிக்கி உடல் வெந்தாலும்கூட ஒருவன் உயிர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றலும் தவமும் நிறைந்த பெரியோர்களை அவமதித்துத் தவறிழைப்பவர்கள் எக்காலத்தும் தப்பிப் பிழைக்க முடியாது.
• எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் = கொடிய நெருப்பில் வெந்தாலும் உயிர் பிழைக்க வழி உண்டு,• பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் = பெரியோரை அவமதித்து வாழ்வோர் தப்பிப் பிழைக்க முடியாது.
மு.வரதராசன்
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
பரிமேலழகர்
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார். (தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையே உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், (குறள்-6) அது கூடாதாகலான், அதற்கு ஏதுவாய பிழை செய்யற்க என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
Meaning in English
Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offence





