கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்குஆற்றாதார் இன்னா செயல்.
kURRattaik kaiyAl viLittaRRAl ARRuvArkkARRAtAr innA seyal
Paalai Murugan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவு, செல்வம், படை ஆகிய ஆற்றல்கள் நிறைந்த பெரியோர்களுக்கு வலிமையற்றவர்கள் தாமே முன்வந்து தீங்கிழைப்பது, எமனைத் தானே கைகாட்டி அழைப்பதற்குச் சமமாகும்.
• ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் = பேராற்றல் மிக்கோருக்கு வலிமையற்றவர் தீங்கிழைப்பது,• கூற்றத்தைக் கையால் விளித்தற்று = எமனைத் தானே கைகாட்டி அழைப்பதற்கு ஒப்பாகும்.
மு.வரதராசன்
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
பரிமேலழகர்
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.
Meaning in English
When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey





