செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.
seppin puNarssipOR kUTinum kUTAtEuTpakai uRRa kuTi
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
செப்புச் சிமிழும் அதன் மூடியும் பொருந்தி இருப்பதுபோல் வெளித்தோற்றத்தில் வேற்றுமையின்றித் தெரிந்தாலும், உட்பகை தோன்றிய குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளத்தளவில் ஒருபோதும் உண்மையாக ஒன்றுசேர மாட்டார்கள்.
• செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் = செப்புச் சிமிழும் மூடியும் போல வெளியில் சேர்ந்திருந்தாலும்,• உட்பகை உற்ற குடி கூடாதே = உட்பகை கொண்ட குடும்பத்தார் உள்ளத்தால் சேரவே மாட்டார்கள்.
மு.வரதராசன்
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
பரிமேலழகர்
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார். (செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடு வந்தது என்பதுபோலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.
Meaning in English
As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway





