தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
tanRuNai inRAl pakaiyiraNTAl tAnoruvaninRuNaiyAk koLkavaRRin onRu
Gowripriya Palanisamy
பொருள் / உரை
முருகா எளிய உரை
தனக்கு உதவத் துணையின்றி, எதிர்ப்போரோ இரண்டு தரப்பாகி, தான் மட்டும் தனியாக இருக்கும் இக்கட்டான சூழலில், அந்த இரு பகைவர்களுள் ஒருவனைத் தனக்கு இனிய நல்நட்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
• தன்துணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் = துணையின்றிப் பகையோ இரண்டாகித் தான் தனியானால்,• இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று = அவ்விரு பகையுள் ஒன்றை இனிய நட்பாக்கிக் கொள்க.
மு.வரதராசன்
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
Meaning in English
Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached





