செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.
seRuvArkkus sENikavA inpam aRivilAanjsum pakaivarp peRin
Dilraj Gopi
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிய வேண்டிய அறிவு இல்லாத, எதற்கும் அஞ்சி நடுங்கும் கோழைகளைப் பகைவர்களாகப் பெற்றால், அவர்களை வெல்லும் ஆற்றலாளர்களுக்கு வெற்றியும் நன்மையும் ஆகிய உயர்ந்த இன்பங்கள் ஒருபோதும் நீங்காமல் நிலைத்திருக்கும்.
• அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் = அறிவற்ற, கோழையான பகைவரைப் பெற்றால்,• செறுவார்க்குச் சேணிகவா இன்பம் = அவர்களை வெல்வோருக்கு உயர்ந்த இன்பங்கள் ஒருபோதும் நீங்காது.
மு.வரதராசன்
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
பரிமேலழகர்
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
Meaning in English
The joy of victory is never far removed from those Who've luck to meet with ignorant and timid foes





