Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 850

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும்.

ulakattAr uNTenpa tillenpAn vaiyattalakaiyA vaikkap paTum

Tharika

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகத்துச் சான்றோர்கள் அனைவரும் ஆராய்ந்து உண்மை என்று ஏற்றுக்கொண்ட நற்பண்புகளையும் அறநெறிகளையும் தன் அறியாமையால் இல்லை என்று மறுத்துரைப்பவன், மனிதனாகக் கருதப்படாமல் இவ்வுலகில் நடமாடும் ஒரு பேயாகவே கருதி ஒதுக்கப்படுவான்.

• உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் = சான்றோர் உண்மை என்று ஏற்பதை இல்லை என மறுப்பவன்,• வையத்து அலகையா வைக்கப்படும் = இவ்வுலகில் மனித வடிவில் உலவும் பேயாகவே கருதப்படுவான்.

மு.வரதராசன்

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

பரிமேலழகர்

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

Meaning in English

Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's name

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout