Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 848

பொருட்பால்அங்கவியல்85. புல்லறிவாண்மை

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.

Evavunj seykalAn tAntERAn avvuyirpOom aLavumOr nOy

Varun Vishwa

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவுடைய பெரியவர்கள் நன்மையை எடுத்துச் சொன்னாலும் கேட்கமாட்டான்; தானாகவும் சிந்தித்து நல்வழியைத் தெளியமாட்டான்; அத்தகையவனுடைய வாழ்வானது அவனது உயிர் பிரியும் வரை இந்த உலகிற்கே ஒரு தீராத நோயாகும்.

• ஏவவும் செய்கலான் தான்தேறான் = பிறர் சொன்னாலும் செய்யான்; தானாகவும் அறியான்;• அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் = அவனது உயிர் பிரியும் வரைக்கும் அவன் உலகிற்கே ஒரு நோயாவான்.

மு.வரதராசன்

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

பரிமேலழகர்

ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.

Meaning in English

Advised, he heeds not; of himself knows nothing wise; This man's whole life is all one plague until he dies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout