கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்.
kallAta mERkoN Tozhukal kasaTaRavallatUum aiyam tarum
Hilda Mercy
பொருள் / உரை
முருகா எளிய உரை
தான் முறைப்படி கற்காத கலைகளையும் கற்றவன்போல் வேடமிட்டு நடப்பது, தான் உண்மையில் குற்றமறக் கற்றுத் தேர்ந்துள்ள சொந்தத் துறையின் மீதும் பிறருக்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிடும்.
• கல்லாத மேற்கொண்டு ஒழுகல் = தாம் கற்காதவற்றையும் கற்றவர்போல் பாசாங்கு செய்து நடப்பது,• கசடற வல்லதூஉம் ஐயம்தரும் = தாம் உண்மையாகக் கற்றுத் தேர்ந்த துறை மீதும் பிறர்க்குச் சந்தேகம் தரும்.
மு.வரதராசன்
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
பரிமேலழகர்
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)
சாலமன் பாப்பையா
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
Meaning in English
If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw





