Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 834

பொருட்பால்அங்கவியல்84. பேதைமை

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையின் பேதையார் இல்.

Oti uNarntum piRarkkuraittum tAnaTangkAppEtaiyiR pEtaiyAr il

Archana Dilip

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநூல்களைக் கற்று, அதன் பொருளை உணர்ந்து, பிறருக்கும் எடுத்துச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் அந்த நெறியில் அடங்கி ஒழுகாத மூடனை விட மிகப்பெரிய மூடன் இவ்வுலகில் வேறு யாருமே இல்லை.

• ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் = அறநூல்களைக் கற்று உணர்ந்து பிறருக்குப் போதித்தும்,• தானடங்காப் பேதையின் பேதையார் இல் = தான் அடங்கி வாழாத மூடனை விடப் பெரும் மூடன் வேறு எவனுமில்லை.

மு.வரதராசன்

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

பரிமேலழகர்

ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

சாலமன் பாப்பையா

படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.

Meaning in English

The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not; where can greater fool be found

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout