Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 827

பொருட்பால்அங்கவியல்83. கூடாநட்பு

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்.

solvaNakkam onnArkaN koLLaRka vilvaNakkamtIngku kuRittamai yAn

Archana Natarajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் = வில் வளைவது அம்பெய்து கொல்லும் தீங்கைக் குறிப்பதால்,• ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க = பகைவரின் பணிவான நயவஞ்சகச் சொற்களை நன்மையெனக் கொள்ளக்கூடாது.எளிய விளக்கம்:வேடனின் வில் வளைந்து குனிவது உயிரைக் கொல்லும் அம்பை எய்வதற்கே ஆகும்; அதுபோல, உள்ளத்தில் பகைமை கொண்டவர்கள் காட்டும் போலிப் பணிவுச் சொற்களையும் நன்மையென நம்பி ஏற்றுக்கொள்ளக் கூடாது.

மு.வரதராசன்

வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

பரிமேலழகர்

வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தெளியற்க' என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

Meaning in English

To pliant speech from hostile lips give thou no ear; 'Tis pliant bow that show the deadly peril near

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout