நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.
naTTArpOl nallavai sollinum oTTArsolollai uNarap paTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
நண்பனைப் போல நன்மை தரும் சொற்களைப் பேசி நடித்தாலும், உள்ளத்தில் பகைமை கொண்டவர்களின் வஞ்சக உள்நோக்கம் மிக விரைவிலேயே வெளிப்பட்டு எல்லோராலும் உணரப்பட்டுவிடும்.
• நட்டார்போல் நல்லவை சொல்லினும் = நண்பரைப் போல நன்மை தருவனவற்றைப் பேசினாலும்,• ஒட்டார்சொல் ஒல்லை உணரப்படும் = மனதால் பொருந்தாத பகைவரின் சொல் விரைவிலேயே உணரப்படும்.
மு.வரதராசன்
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.
பரிமேலழகர்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்' - பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம். ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார், 'ஒல்லை உணரப்படும்' என்றார்.)
சாலமன் பாப்பையா
நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.
Meaning in English
Though many goodly words they speak in friendly tone, The words of foes will speedily be known





