கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு.
kanavinum innAtu mannO vinaivERusolvERu paTTAr toTarpu
Vijayalakshmi Shravan
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருக்கும் இரட்டை வேட மனிதர்களின் நட்பானது, விழித்திருக்கும் நனவில் மட்டுமல்லாமல் ஒருவன் காணும் கனவிலும்கூடத் தீராத துன்பத்தையே தரும்.
• வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு = சொல்லும் செயல் வேறாக உள்ள கபடரின் தொடர்பு,• கனவினும் இன்னாது = நனவில் மட்டுமல்ல கனவிலும் கூடத் துன்பத்தையே தரும்.
மு.வரதராசன்
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
பரிமேலழகர்
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. (வினை, சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை, இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை.)
சாலமன் பாப்பையா
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
Meaning in English
E'en in a dream the intercourse is bitterness With men whose deeds are other than their words profess





