செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று.
seytEmanj sArAs siRiyavar punkENmaieytalin eytAmai nanRu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாம் எவ்வளவு நன்மைகளைச் செய்து காத்தாலும் ஆபத்துக் காலத்தில் துணையாக நிற்காத அற்பர்களின் தீய நட்பானது, ஒருவனுக்கு உண்டாவதை விட அப்படிப்பட்ட நட்பு இல்லாமல் இருப்பதே மிகவும் நன்மையாகும்.
• செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை = எவ்வளவு உதவி செய்தாலும் காவலாக நிற்காத கீழ்மக்களின் அற்ப நட்பு,• எய்தலின் எய்தாமை நன்று = உண்டாவதை விட இல்லாமல் இருப்பதே நன்மையாகும்.
மு.வரதராசன்
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
பரிமேலழகர்
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று. (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்குமேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது, 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தெலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
Meaning in English
'Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers press





