அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை.
amarakat tARRaRukkum kallAmA annArtamarin tanimai talai
Shankar Ram
பொருள் / உரை
முருகா எளிய உரை
போர்க்களத்தில் ஆபத்து நேரும்போது வீரனைக் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போகும் பயிற்சியற்ற முரட்டுக் குதிரையைப் போன்ற போலி நண்பர்களோடு வாழ்வதை விட, ஒரு துணையுமின்றித் தனித்திருப்பதே மிகவும் மேலானதாகும்.
• அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் = போர்க்களத்தில் வீழ்த்திவிட்டு ஓடும் பழக்கப்படாத குதிரை போன்றவரின் துணையை விட,• தனிமை தலை = எந்த நட்பும் இல்லாமல் தனித்திருப்பதே மேலானதாகும்.
மு.வரதராசன்
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
பரிமேலழகர்
அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.)
சாலமன் பாப்பையா
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.
Meaning in English
A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better far





