கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.
keTungkAlaik kaiviTuvAr kENmai aTungkAlaiuLLinum uLLanj suTum
Rajinikanth
பொருள் / உரை
முருகா எளிய உரை
தனக்குத் துன்பம் வந்த காலத்தில் தன்னைக் கைவிட்டு ஓடிய போலி நண்பர்களின் துரோகமானது, ஒருவன் மரணப்படுக்கையில் உயிர் பிரியும் இறுதிக்காலத்தில் நினைத்துப் பார்த்தாலும்கூட அவனது நெஞ்சத்தை நெருப்பாய்ச் சுட்டுப் பொசுக்கும்.
• கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை = துன்பம் வரும்போது கைவிட்டு ஓடிய போலி நண்பர்களின் நினைவு,• அடுங்காலை உள்ளினும் உள்ளஞ்சுடும் = மரணப்படுக்கையில் உயிர் பிரியும் போது நினைத்தாலும் நெஞ்சைச் சுட்டுப் பொசுக்கும்.
மு.வரதராசன்
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
பரிமேலழகர்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.
Meaning in English
Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to think





