ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.
Utiyam enpa toruvaRkup pEtaiyArkENmai orIi viTal
Suren Sekaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய லாபமும் நற்பேறும் எதுவென்றால், அறிவில்லாத தீயவர்களோடு கொண்டிருந்த நட்பை அடியோடு கைவிட்டு அவர்களை விட்டு விலகுவதேயாகும்.
• ஒருவற்கு ஊதியம் என்பது = ஒருவனுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய லாபம் எதுவென்றால்,• பேதையார் கேண்மை ஒரீஇவிடல் = அறிவற்றோரின் நட்பை அடியோடு கைவிட்டு விலகுவதேயாகும்.
மு.வரதராசன்
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
பரிமேலழகர்
ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். (நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.
Meaning in English
'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away





