புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.
puNarssi pazhakutal vENTA uNarssitAnnaTpAng kizhamai tarum
Yogi Sekar
பொருள் / உரை
முருகா எளிய உரை
நட்பு உண்டாவதற்கு அருகருகே வாழ்வதோ, நேரில் பலமுறை பழகியிருப்பதோ தேவையில்லை; இருவரின் உள்ளங்களிலும் உள்ள ஒத்த தூய மன உணர்வே ஆழமான நட்பு உரிமையை இயல்பாக உண்டாக்கிவிடும்.
• புணர்ச்சி பழகுதல் வேண்டா = அருகருகே வாழ்வதோ நேரில் பழகியிருப்பதோ தேவையில்லை,• உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் = இருவரின் ஒத்த மன உணர்வே ஆழமான நட்பு உரிமையைத் தரும்.
மு.வரதராசன்
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
பரிமேலழகர்
புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217) நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
Meaning in English
Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mind





