நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு.
nakutaR poruTTanRu naTTal mikutikkaNmERsen RiTittaR poruTTu
Vinodh Baskaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
நட்பு என்பது வெறும் கூடிச் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அமைந்தது அன்று; நண்பன் எல்லை மீறித் தவறான பாதையில் செல்லும்போது, உடனே முற்பட்டுச் சென்று அவனைக் கண்டித்து நல்வழிப்படுத்துவதற்காகவே ஆகும்.
• நட்டல் நகுதற் பொருட்டன்று = நட்பு கொள்வது வெறும் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல,• மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு = நண்பன் நெறிதவறும் போது உடனே கண்டித்து நல்வழிப்படுத்தவுமாகும்.
மு.வரதராசன்
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
பரிமேலழகர்
நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
Meaning in English
Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray





