நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.
naviltoRum nUnayam pOlum payiltoRumpaNpuTai yALar toTarpu
D. Imman
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒரு சிறந்த நூலை மீண்டும் மீண்டும் கற்கக் கற்க அது மேன்மேலும் புதிய அறிவையும் இன்பத்தையும் தருவது போல, நற்பண்பு உடையவர்களோடு பழகப் பழக அவர்களுடைய நட்பும் நாளுக்கு நாள் மேன்மேலும் இன்பத்தையும் நன்மையையும் தரும்.
• நவில்தொறும் நூல்நயம் போலும் = சிறந்த நூலைக் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருவது போல,• பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு = பழகப் பழக நற்குணமுள்ளோரின் நட்பு மென்மேலும் இன்பம் தரும்.
மு.வரதராசன்
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
பரிமேலழகர்
பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
Meaning in English
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good





