புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.
purantArkaN nIrmalkas sAkiRpin sAkkATirantukOT Takka tuTaittu
R. Sathyanarayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னை அன்போடு காத்த தலைவனின் கண்களில் நன்றிப் பெருக்கால் கண்ணீர் மல்குமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினால், அத்தகைய மரணம் இரந்தாவது பெற்றுக்கொள்ளத்தக்க ஒப்பற்ற பெருமை உடையதாகும்.
• புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் = தம்மைக் காத்த தலைவன் கண்களில் கண்ணீர் பெருக வீரமரணம் அடைந்தால்,• சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து = அத்தகைய மரணம் வேண்டி யாசித்துப் பெறத்தக்க உன்னதப் பெருமை உடையதாகும்.
மு.வரதராசன்
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
பரிமேலழகர்
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து. (மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.
Meaning in English
If monarch's eyes o'erflow with tears for hero slain, Who would not beg such boon of glorious death to gain





