சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
siRumaiyum sellAt tuniyum vaRumaiyumillAyin vellum paTai
S. Jayaprakash
பொருள் / உரை
முருகா எளிய உரை
எண்ணிக்கையில் தேய்ந்து குறைதலும், நாட்டின் தலைமை மீது தீராத மனக்கசப்பும், வீரர்களின் குடும்பங்களில் வறுமையும் இல்லாதிருக்குமானால், அந்தப் படை போரில் நிச்சயம் வெற்றி வாகை சூடும்.
• சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் = எண்ணிக்கைச் சுருக்கமும், தலைவன் மீதான வெறுப்பும், வறுமையும்,• இல்லாயின் வெல்லும் படை = இல்லாவிட்டால் அப்படை நிச்சயம் வெற்றி பெறும்.
மு.வரதராசன்
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
பரிமேலழகர்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)
சாலமன் பாப்பையா
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
Meaning in English
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory





