தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.
tArtAngkis selvatu tAnai talaivantapOrtAngkum tanmai aRintu
Srisha Vijayasekar
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் மீது தொடுக்கப்படும் பகைவரின் போர்த் தாக்குதலை முறியடிக்கும் வியூக முறைகளை உணர்ந்து, அவர்களின் முன்னணிப் படையின் தாக்குதலைத் தடுத்துத் தான் முன்னேறிச் செல்வதே சிறந்த படையாகும்.
• தலைவந்த போர் தாங்கும் தன்மை அறிந்து = பகைவரின் போர்த் தாக்குதலைத் தடுக்கும் வியூகம் அறிந்து,• தார்தாங்கிச் செல்வது தானை = அவர்களின் முன்னணிப் படையைத் தடுத்து முன்னேறுவதே படையாகும்.
மு.வரதராசன்
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
பரிமேலழகர்
தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.
Meaning in English
A valiant army bears the onslaught, onward goes, Well taught with marshalled ranks to meet their coming foes





