மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
maRamAnam mANTa vazhisselavu tERRamenanAnkE Emam paTaikku
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
அஞ்சாத வீரம், தன்மானம், முன்னோரின் அறநெறி தவறாத நடத்தை, தலைவனின் நம்பிக்கைக்குரிய பற்றுறுதி ஆகிய இந்த நான்கு நற்குணங்களுமே ஒரு படைக்கு அழியாத பாதுகாப்புக் கவசங்களாகும்.
• மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் = வீரம், மானம், முன்னோரின் அறவழி நடத்தல், நம்பிக்கை பெறுதல்,• எனநான்கே ஏமம் படைக்கு = ஆகிய இந்த நான்கு பண்புகளுமே படைக்குச் சிறந்த பாதுகாப்பாகும்.
மு.வரதராசன்
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
பரிமேலழகர்
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது. (இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)
சாலமன் பாப்பையா
வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
Meaning in English
Valour with honour, sure advance in glory's path, with confidence; To warlike host these four are sure defence





